சமண அவதூறுகள் - 1
தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு
அரும்பாடுப்பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம்
மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள்
அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,
"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்" - தனிப் பாடல்
அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை!
எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும்,
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு
அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல்
இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்?
நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!
(நன்னூல்).
இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர்.
அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ்
நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக
இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த
போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தை கூறுவோம்!
அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான்.
வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால்
அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்
மிருகங்கள் பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன
என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.
இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!
"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று" - திருக்குறள் (259)
சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே
உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை
அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.
"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)
என்றும்,
"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று" - அருங்கலச் செப்பு (37)
என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில்
இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.
சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!
வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு
சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய
அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை
மக்களும் நம்பலானார்கள். சமணர்கள் எழுதிய நூற்கள் அழிக்கப்பட்டன.
அவர்களுடைய நூற்கள் பிற சமய நூற்கள் ஆக்கப்பட்டன. அருகக்
கடவுள் வாழ்த்து விநாயகர் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அருகன்
கோயில்கள் சைவ, வைணவ கோயில்கள் ஆயின. இதில் வேடிக்கை
என்னவென்றால்? அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?
சமணம் வீழ்ந்ததும், வேதமதம் சைவத்தை அழித்தது. சைவ
வேளாளர்கள் தாழ்ந்துப் போனார்கள். சைவர்கள் நிறுவகித்து வந்த
கோயில்கள் வேதமதத்தினர் தம் வசப்படுத்தினார்கள். சைவ
வேளாளர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு
துரத்தப்பட்டார்கள். உதாரணம்: சிதம்பரம் கோயில்.
சரி. விடயத்திற்கு வருவோம். சமணத்தைப் பற்றிய அவதூறுகள்
என்னென்ன? அவைகள் உண்மைதானா? அதற்கு ஆதாரம்
என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வது தான்
இக்கட்டுரையின் நோக்கம்.
சமண மதம் நாத்திக மதம் - அவதூறு ஒன்று!
சமண மதம் நாத்திகமா?
இந்த கேள்வியை தற்போதைய வலைஞர்களை கேட்டால்
பெரும்பாலோர் நாத்திகம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நடைபெற்று வந்த
பிரசாரத்தின் வலு அப்படி.
சமணம் ஆத்திகமே!
சமணம் இறைவனை, இறைமையை (இறைத்தன்மை) ஏற்றுக்கொள்ளும்
மதமே. அவ்வகையில் அது ஆத்திக மதமே!
சமணம் உயிரின்பால் பட்டது என்பதை முன்னமே சொன்னேன்.
எந்த ஒரு ஆன்மாவும் சுயரூபத்தில் இறைவன்தான். ஆனால்,
அவைகள் வினைத்துகள்களால் அழுத்தப்பட்டு தன்னிலை மறந்து
மடமையில் ஆழ்ந்திருகின்றன.
எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.
"தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்" - அறநெறிச் சாரம் (77)
ஆனால், அது கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்;
யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும்
அழிப்பவரும் அல்லர்.
சற்று பொறுங்கள். கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?
அப்படியானால், அது நாத்திக மதம்தானே? என்று யாராவது
கேட்டலாம். இந்தியச் சமயங்கள் தவிர வேறு எந்த சமயமும்
இக்கேள்வியை கேட்டிருந்தால் யான் நாத்திக மதம் என்றுதான்
கூறியிருப்பேன். ஏன்னென்றால் அவர்கள் கூற்றுப்படி கர்த்தா
வாதத்தை ஏற்காத எந்த மதமும் நாத்திகம்தான். ஆனால்,
இந்திய மதங்களைப் பொருத்தவரை நாத்திகம் என்ற பேச்சுக்கே
இடமில்லை. இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-)
பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது. திராவிட சிசு
என்றழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய தேவாரமும்,
பெரியப் புராணமும்தான் அதற்கு சாட்சி. அங்கே படித்துத்
தெரிந்துக் கொள்ளுங்கள்.
காட்டுக்கள் சில:
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனோடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே"
"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஒட்டி வாது செய்யத் திருவுள்ளமே"
"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே"
என்று சிவபெருமானை அழைக்கிறார்!
இரா.பானுகுமார்,
சென்னை.